Saturday, March 8, 2014

குடும்ப புரட்சி !!!


மகளிர் தினம்..வாழ்த்துக்களும் பாராட்டுகளும் வந்து குவிகிறது பெண்களுக்கு..
முதலில் நானும் வாழ்த்தை பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்..
பெண்களுக்கு உரிமை இல்லை சுதந்திரம் இல்லை என்று எவரையும் குறை கூறும் வாதமாக நான் இதை வைக்கவில்லை..
பெண்களாகிய நம்மவர் அனைவரையும் கேள்விக் கூண்டில் நிறுத்தும் வாதமாகவே இதை வைக்கிறேன்..அதிலும் குறிப்பாக படித்த திருமணமான குடும்ப பொறுப்பு வகிப்பவர்கள் இதில் முக்கிய அங்கம் வகிப்பர் ..
ஒரு நாடு முன்னேற ஒவ்வொரு குடும்பமும் முன்னேற வேண்டும்..இது நான் கூறும் கருது அல்ல..பெரிய மகான்கள் கூறியது..
பெண்களாகிய நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்..நமது கடமையை சரிவர செய்கிறோமா என்ன ? நினைவு தெரிந்ததில் இருந்து கல்வி கற்கிறோம் வேலை செய்கிறோம் பின்னர் திருமணம்...அதற்கு பின்னர் சிந்தனையை, வட்டத்தை மிக மிக குறுக்கிக் கொள்கிறோம்..சிலர் திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு செல்வதை கூட நிறுத்திக் கொள்கின்றனர்..சரி வேலைக்கு செல்கிறார்களா,இல்லையா என்பது இங்கு வாதம் இல்லை..அது அவரவர் விருப்பம்..எனவே அதை விடுங்கள்..
அனால் குடும்பத்தை நிர்வகித்துக் கொள்கிறோம் என்று நாம் ஒரு கடமையை கையில் எடுக்கிறோம்..அதை ஏன் பெரும்பாலானோர் சரி வர செய்வது இல்லை..நீங்கள் கேட்கலாம் ..ஏன் நான் என் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்கிறேன்..குடும்பத்தினரோடு அன்போடு கனிவோடு பண்போடு இருக்கிறேன்..சமைக்கிறேன்..வீட்டை கவனித்துக் கொள்கிறேன் என்று கூறுகிறீர்களா..எல்லாம் சரி..ஆனால் கடமை என்று நினைத்து செய்யும் இந்த செயல்கள் உங்கள் குடும்பம் என்ற குறுகிய வட்டத்தோடு நின்று விட்டதே..நம் குடும்பத்தை பாதுகாக்கும் இந்த சமுதாயம் எங்கே ..அதை மறந்து விட்டோமே !!
குடும்ப பெண்களின் எண்ணம்,சிந்தனை எல்லாமே பணம் ஈட்டுவது,பொருள் வாங்குவது,மனை கட்டுவது,குழந்தை வளர்ப்பது,நவ நாகரீகத்தோடு அந்தஸ்தோடு பகட்டாக வாழ்வது என்று சுருங்கி விட்டதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டும்..சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய முடியும் என்று நினைகிறீர்களா..நம்மால் மட்டுமே முடியும் சில செயல்கள் உண்டு..
நாம் நினைத்தால் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க இயலாதா..
நாம் நினைத்தால் மாத வருவாயில் ஒரு சிறு தொகையை ஆதரவற்ற குழந்தைகளின் எழுத்தறிவிற்கு உதவ இயலாதா..நாம் நினைத்தால் வருமான வரியை நியாயமாக செலுத்த இயலாதா ..நாம் நினைத்தால் நம் தெருவை சுகாதாரமாக வைக்க இயலாதா ..எல்லாவற்றிக்கும் மேலாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த இயலாதா(நீரின் அவசியத்தை இன்னும் பத்தே ஆண்டுகளில் நாம் புரிந்து கொள்வோம்)..
இவை அனைத்தையும் கல்வி அறிவு இல்லாத பெண்கள் புரிந்து கொள்வது கடினம் ..அவர்கள் மனதும் சமுதாயம் என்ற அளவுக்கு விரிய மறுக்கும்..ஆனால் படித்து பட்டம் வாங்கி குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் ஏன் இதை செய்யவில்லை...எத்தனை பேர் இன்னும் தன் குடும்பம் மட்டுமே என்று சுருக்கி வைத்துள்ளனர்.சரி கூறுங்கள் எத்தனை பெண்கள் முதலில் நியாய விலை கடைக்கு செல்கிறீர்கள்..உங்களுக்கு வசதி அதிகம் எனில் அங்கு பொருள் வாங்க வேண்டாம்..ஆனால் அங்கு உள்ள குறைபாடுகளை அரசாங்கத்திற்கு தெரியப் படுத்தலாம் அல்லவா ..
சரி அது கூட வேண்டாம் ..எத்தனை பேர் நிலத்தடி நீர் குறைவதை பற்றியும் ,புவி வெப்பமயமாதல் பற்றியும் கவலை கொண்டுள்ளோம் ..இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள்..ஒவ்வொரு குடும்பமும் சிறிது ஒழுங்கு செய்தால் போதும்..அது பெரிய அளவில் மாற்றத்திற்கு வழி வகுக்கும்..
இவை அனைத்தையும் செய்யாமல் பின்னர் என்ன கடமையை செய்வதாக பறைசாற்றி கொள்கிறோம்..இப்படியே நாம் குறுகிய மனப்போக்கோடு சுயநலமாக இருந்து நம் வீட்டில் ஒரு நல்ல குழந்தையை உருவாக்கலாம் ..ஆனால் இனி வரும் காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து இந்த உலகத்தை பார்க்கும் போது
அதற்கு நல்ல காற்று கிடைக்காது...
நல்ல தண்ணீர் கிடைக்காது..
நல்ல மண் வாசனை கிடைக்காது..
நல்ல மழை கிடைக்காது..
நல்ல எண்ணம் கொண்ட மக்களை உள்ளடக்கிய சமுதாயம் கிடைக்காது..
பெண் குழந்தைகள் தெருவில் நடக்க சுதந்திரம் கிடைக்காது..
எல்லாவற்றிக்கும் மேலாக நோய் நொடியற்ற இனிமையான வாழ்வு கிடைக்காது..
இவை அனைத்தும் குறையும் போது நாம் மெச்சிக் கொள்ளும் நம் கலாச்சாரமும் சீரழியும்..
இதற்கு முக்கிய காரணமாக ஒவ்வொரு குடும்ப தலைவியும் பொறுப்பு வகிப்பர்..
எனவே சிந்தனையை விரிதாக்குவோம்..
குடும்ப புரட்சியை உருவாக்குவோம்..இது யாரையும் திருத்துவதற்கு அல்ல..நம்மை நாமே சீர் செய்து கொள்ள..விட்டொழிப்போம் அறியாமையை!! உரிமையை நாமாக எடுத்து எழுச்சியை உண்டாக்குவோம்.. வேறெங்கும் அல்ல..நம் குடும்பத்தில் :-)
கடைசியாக ஒன்று...சமுதாய அக்கறை கொண்டுள்ள பல பெண்கள் உள்ளனர் ..அவர்களை இத்தினத்தன்று தலை வணங்குகிறேன் ..