Tuesday, July 4, 2023

லட்சுமிப் பாட்டி ( என் அம்மாயி )

 


லட்சுமிப் பாட்டி(என் அம்மாயி) 21.06.2023 ல் தனது 82வது வயதில் இயற்கை எய்தினார்.  அத்தகைய பொக்கிஷத்தைப் பற்றிய சில வரிகள்.
 
 
அம்மாச்சி என்ற பொழுதிலும் பல நேரங்களில் தாயாய் இருந்தவள். பொறுமையும் ஈகை குணமும் இயல்பாய் பிறந்தவள்.
தன் 27 வயது மகனை நோய் தீண்டிய போதும் அந்த நோயால் மகனை இழந்த பின்பும் தீராத மன தைரியத்தோடு வாழ்வை எதிர் கொண்டவள்.

மேட்டாங்காட்டில் வெயிலில் காடு,கரை, அடுப்படி என ஓயாது உழைத்தவள்.
தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் பிள்ளைகளுக்கு வாரி வழங்கியவள்.
எந்த வேலையும் கற்றுக்கொண்டு செய்யக்கூடிய திறன் கொண்டவள்.
அறிவியல் கூறிய எந்த வரம்பிற்கும் அடங்க மறுத்தவள். அந்த வரம்பிற்குள் இல்லாமலேயே வாழ்ந்து காட்டியவள்.
 
தாயாய்,​அம்மாயியாய் ​,​தோழியாய்,​ சண்டைக்காரியாய், குழந்தையாய் பல பரிமாணங்களை தந்தவள். 

உன் வதங்கிய குண்டாவினுள்ளும் பழைய சேலையினுள்ளும் எங்கள் இளமைக்கால நினைவுகள் பொதிந்துள்ளது.ஆண்டிக்காடு ஏரியின் மேல் உன் முந்தானையை பிடித்துக் கொண்டு எத்தனை முறை நடந்திருப்போம்.கொல்லங்காட்டிலும் கொல்லையிலும் எத்தனை ஆயிரம் முருங்கை காய்களை பறித்திருப்பாய்.

உன் முந்தானையின் வா​​சமும் மடியின் அரவணைப்பும் இல்லாமல் ஏங்குகிறோம்.

இப்படி ஒரு உறவை இனி எங்கு சென்றும் பெற இயலாது.

அரிதினும் அரிதான உறவு நீ.யாருக்கும் கிடைக்கிறதா அன்பு நீ.

நீ வளர்த்த 4 கொள்ளுப் பிள்ளைகள் உன் பாசத்தையும் பண்பாட்டையும் கடத்தட்டும்.

உழைப்பு,தைரியம், அன்பு, உண்மை , சகிப்புத்தன்மை இவற்றை வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தாய். வாழ்க்கையை இயல்பாய் தைரியமாய் கடந்த  நீ, உன் வாழ்வையே எங்களுக்கு பாடமாய் விட்டுச் சென்றுள்ளாய்.

நீ கொடுத்த பாடத்தை எடுத்துக்கொண்டு நீ இல்லாமல் பயணிக்க போகிறோம். 

அடுத்த முறை மனிதனாகப் பிறப்போம் எனில் நீயே​ எங்கள்​ அம்மாச்சியாக வரவேண்டும்.

போய் வா திருமகளே​!​ லட்சுமியே​!​ எங்கள் குடும்ப சாமியே​!​

- உன் நினைவுகளை சுமக்கும் நாங்கள் .....

​​